அன்பு சகோதரிக்கு —
என் வயது, 48 ஆசிரியையாக பணிபுரிகிறேன். அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, சித்தி, சித்தப்பா என, அன்பு நிறைந்த குடும்பத்தில், ஒன்பது பிள்ளைகளின் நடுவில் பிறந்த, ஐந்தாவது பெண் நான். மூன்று அக்கா, ஒரு அண்ணன், இரண்டு தம்பி, இரண்டு தங்கை என, திருமணத்திற்கு முன், மிக சந்தோஷமாக இருந்தேன்.
நான் எம்.ஏ., படிக்கும் போது, ஒருவரை சந்தித்தேன். அவர், பி.எஸ்சி., படித்தவர்; அவருடன் பிறந்தவர்கள் ஏழு பேர். சாதாரணமாக பழகிய எங்களை, நான் அவரை காதலிப்பதாக, என் குடும்பத்திற்கு வேண்டாதவர்கள் கதை கட்டியதால், தவறு என்று தெரிந்தும், அவரை வலிய காதலித்தேன். என் சகோதரர் எவ்வளவோ எடுத்துக் கூறியும், என் மரமண்டைக்கு, அப்போது ஏறவில்லை. அவர்கள் மனதை புண்படுத்தினேன். மனதை கல்லாக்கிக் கொண்டு, என் அண்ணன் அவரை, எனக்கு மணம் முடித்து தருவதாக கூறினார். நான், உடனே என் காதலரின் மதிப்பெண் பட்டியலை வாங்கிப் பார்த்தேன். அவர், ஒரு சப்ஜெக்ட்டில் தேர்ச்சி பெற்றிருக்கவில்லை. உடனே, அதை எழுத உதவி செய்து, தேர்ச்சி பெற வைத்தேன். பின், நான் பி.எட்., சேரும் போது, அவரையும் பி.எட்., சேர வைத்தேன். படித்து முடித்தவுடன், ஒரு வேலைக்கு, அவரை தகுதி ஆக்கி விட்டேன் என, என் அண்ணனிடம் கூறினேன். அதன்பின், கடந்த, 1987ல் எங்களுக்கு முறைப்படி திருமணம் நடந்தது. அடுத்த வருடம் அவருக்கும், அதுக்கு அடுத்த வருடம், எனக்கும், ஆசிரியராக வேலை கிடைத்தது.
இதற்கு இடையில், நான் எம்.எட் ., படித்தேன். அவரையும் எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.எட் ., என்று படிக்க தூண்டினேன். மூன்று ஆண் பிள்ளைகள் பிறந்தனர். அழகான மூன்று பிள்ளைகள், நல்ல குடும்பத்தை இறைவன் கொடுத்தான் என்று, வாழ்க்கையை முறையாகக் கொண்டு சென்றோம். சொந்தமாக மூன்று மாடி வீடு, கிராமத்தில் மூன்று ஏக்கர் நிலம் மற்றும் வீடு மற்றும் வங்கி டிபாசிட், 50 சவரன் நகை என்று, அமைதியாக சென்று கொண்டிருந்தது என் வாழ்க்கை. என் கணவரிடம் தென்பட்ட சிறு சிறு குறைகளை, கண்டு கொள்ளாமல் விட்டது, இன்று புரையோடிய புண்ணாகி விட்டது. அவருடைய சிறுசிறு தவறுகள் இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. தற்போது என் கணவருக்கு, வயது 50.
மாற்றான் மனைவியுடன் பேசுவது, மது அருந்துவது போன்ற பழக்கங்கள் அவரை மெல்ல மெல்ல அரித்து, இன்று சைக்கோ நிலைமையில் உள்ளார். எதற்கு எடுத்தாலும் சந்தேகம்.
இதனால், கையிருப்பு கரைந்தது, நகைகள் மறைந்தன. தற்போது அசையா சொத்துகள் மட்டும்தான் உள்ளன. பிள்ளைகள் வளர்ந்து உயர்கல்விக்கு தயாரானார்கள். பெரியவனுக்கு வயது, 20; இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்தான். மற்ற இருவர் இன்ஜினியர் இரண்டு மற்றும் மூன்றாம் வருடம் படித்து வருகின்றனர்.
ஒருநாள், குடிபோதையில், நான் இல்லாத நேரத்தில், என்னை திட்டி இருக்கிறார். என் பெரிய பையன், அதைத் தட்டிக் கேட்டிருக்கிறான். தகாத வார்த்தைகளால், அவனை கொச்சைப்படுத்தி பேசி இருக்கிறார். நான் வந்தபின், என் மகன் என்னிடம் கூறி வருத்தப்பட்டான். என் கணவரது இந்த பேச்சால், என் பெரிய மகன் மனம் உடைந்து, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். என் மூத்த குழந்தையை இழந்து, இன்று நான், என் மற்ற குழந்தைகளுக்காக, நடைபிணமாகவே வாழ்ந்து வருகிறேன்.
என் கணவர் குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட, மருத்துவ சிகிச்சை அளித்தோம். செலவு ஆனதுதான் மிச்சம்; குடிப்பழக்கம் போகவில்லை.
கணவன், மனைவிக்கு இடையில் உள்ள அந்தரங்கத்தைக்கூட பொது இடங்களிலும், பிள்ளைகள் மத்தியிலும் பேசுகிறார். என் பிள்ளைகள் எதிரில் நான் கூனி, குறுகிப் போகிறேன். இவரை மீண்டும், மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லலாமா அல்லது சட்டப்படி விவாகரத்து செய்யலாமா அல்லது வீட்டை விட்டே துரத்தி விடலாமா? என்னையும், என் பிள்ளைகளையும் விட்டால், இவருக்கு வேறு கதி கிடையாது.
எங்கள் இருவருக்கும் பணி ஓய்வு பெற, இன்னும் பத்து ஆண்டுகள் உள்ளன.
— இப்படிக்கு,
உங்கள் சகோதரி.
ஆசிரியர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஆசிரியைக்கு —
உன் கடிதம் கிடைத்தது. குடிப்பழக்கத்தால், உன் குடும்பத்தில் நேர்ந்த இன்னல்களை அறிந்தேன். உன் குடிகார கணவனை, எந்த மருத்துவராலும், எந்த மனநல ஆலோசகராலும் திருத்த முடியாது. குடிகார கணவனின் கேடுகெட்ட பேச்சுக்களால் நீயோ, உன் மற்ற இரு மகன்களோ, தற்கொலை செய்து கொள்ளும் நிலை வந்து விடக்கூடாது. பணியிலிருந்து ஓய்வு பெற, இன்னும் உனக்கு பத்து ஆண்டுகள் உள்ளன. குடும்பநல நீதிமன்றத்தை அணுகி, உன் கணவனிடமிருந்து முறைப்படி விவாகரத்து பெற்று கொள். மகன்களை படிக்க வைத்து, வேலைக்கு அனுப்பி, அவர்களுக்கு திருமணம் செய்து வை. இடையில் கணவனின் குடிப்பழக்கம், இரு மகன்களுக்கு தொற்றாமல் பார்த்துக் கொள்.
மகன் வழி பேரன் அல்லது பேத்தியை எடுத்துக் கொஞ்சும் போது, பிறவி எடுத்த பலன் கிடைத்து விடும். உன் உடன்பிறப்புகளின் குடும்பத்தாரை அடிக்கடி சந்திக்கப் போ. வாராவாரம் இஷ்ட தெய்வ கோவிலுக்கு போ. நல்லாசிரியர் விருது பெறும் அளவிற்கு, பள்ளியில் உழை.
— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.
நன்றி : தினமலர்
0 comments:
Post a Comment